×

மாஜி அமைச்சர் ‘பெல்’லின் கட்சி பதவி பறிபோவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கட்சி பணியே செய்யாமல் பதவியில் இருக்கும் ‘பெல்’ பெயரை கொண்ட மாஜி அமைச்சர் பதவியை யார் பறிக்க போறா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சேலம்காரருக்கு எதிராக தான் யார்.. தன் பலம் என்ன என்பதை காட்ட மலைக்கோட்டை மாநகரில் பெரிய அளவில் தேனிக்காரர் மாநாடு நடத்தி காட்டினார். தேனிக்காரர் மாநாட்டில் அதிகம் பங்கேற்றது டெல்டா மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சிக்காரர்கள் தானாம். இதனால் அதிர்ச்சியடைந்த சேலம்காரர் தான் யார், தன் பலம் என்ன என்பதை காட்ட தூங்காநகரில் பெரிய அளவில் மாநாடு நடத்தினாராம். மலைகோட்டை மாநாட்டு கூட்டத்தைவிட தூங்கா நகர மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் அதிக தொண்டர்கள் வந்ததாக உளவுத்துறை ரிப்போர்ட் இருக்க வேண்டும் என நினைத்தாராம். இதற்காக கோடி கோடியாக கரன்சிகளை செலவிட்டு இருந்தார். இதற்கான பொறுப்புகளை அந்தந்த மாஜி அமைச்சர்களிடம் கொடுத்து இருந்தாராம். இதனையடுத்து, இலை கட்சியின் மாவட்ட மாஜி அமைச்சர்கள் தங்களது செல்வாக்கை காட்டுவதற்காக போட்டி போட்டு கொண்டு, தங்கள் மாவட்டத்தில் இருந்து ஏராளமான தொண்டர்களை தூங்காநகரத்துக்கு அழைத்து வந்தாங்களாம். ஆனால் கடலோர மாவட்ட மாஜி அமைச்சரான ‘பெல்’ என்பவர், அவரது மாவட்டத்தில் இருந்து கட்சி நிர்வாகம் உத்தரவிட்ட பிறகும் அதிகளவு கட்சியினரை அழைத்து செல்லவில்லையாம். கரன்சியை காட்டாமல் ெதாண்டர்கள் வர மறுத்ததும்… யாருக்கோ பயந்து அதிக கூட்டத்தை தூங்கா நகர மாவட்டத்தில் நடந்த இலை கட்சியின் மாநாட்டுக்கு அழைத்து போகவில்லை என்று உள்ளூர் மட்டுமல்ல, மற்ற மாவட்டங்களில் உள்ள முன்னாள் அமைச்சர்களும் சேலம்காரரிடம் நேரடியாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்களாம். இதனால், மாஜி அமைச்சரான ‘பெல்’ மீது சேலம்காரர் உச்சகட்ட கோபத்தில் இருக்கிறாராம். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் இரண்டு அணியில் கால் வைத்து எந்த அணிக்கு தாவலாம் என்ற மனநிலையில் உள்ள மாஜி அமைச்சர் ‘பெல்’ மற்றும் நிர்வாகிகளை பொறுப்புகளில் இருந்து மாற்ற சேலம்காரர் முடிவு எடுத்துள்ளாராம். இதற்காக தன் ரகசிய டீமை சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் இறக்கி தகவல்களை சேகரிக்க உத்தரவிட்டுள்ளாராம். இந்த தகவல் தெரிய வந்த ‘பெல்’லான மாஜி அமைச்சர் விரக்தியில் இருக்கிறாராம்… இதனால் தன்னை தூக்குவதற்கு பதிலாக தானே நமக்கு வேண்டப்பட்டவர்களிடம் ஐக்கியம் ஆகிவிடலாமா என்று யோசித்து வருகிறார்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தாமரை நிர்வாகிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஊரே கொந்தளிக்கும் நிலைக்கு யார் காரணம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தின், ‘குடி’ என முடியும் ஊரில் முக்கிய தலைவரின் நினைவு நாள் நிகழ்ச்சி வரும் 11ம் தேதி நடக்கிறது. இதில் அத்தனை தரப்பினரும் பங்கேற்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது வழக்கம். இம்முறை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தாமரை கட்சியினரை அனுமதிக்கவே கூடாது என்று கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதாம். கடந்த முறை தாமரை கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தியபோது, முன்னாள் பெண் எம்பியிடம், அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகியானவர் அத்துமீறியது, சமூக வலைத்தளங்களில் வைரலானதோடு, கடும் கண்டனங்களையும் ஏற்படுத்தியதாம். முக்கியமான நினைவு நாள் நிகழ்ச்சிக்கு உரிய மரியாதை செலுத்தாத இந்தச் சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவத்தை முன்னிறுத்தி, இம்முறை தாமரை கட்சியினருக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி தரக்கூடாது என பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் மாவட்டத்தின் உயரதிகாரியை சந்தித்து தங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதுடன், மனுக்களை மலைபோல குவித்துவிட்டு வந்துள்ளார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ அரசு கஜானாவை காலி செய்த பொறுப்பில்லாத அதிகாரி யார்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம் மாவட்டத்துல ஆறு பெயரைகொண்ட நகர் ஆட்சி இருக்குது. இந்த நகர் ஆட்சி ஏழரை கோடி கடன்ல தவித்து வந்துள்ளதாம். கடந்த 20 மாதங்களாக பணியில இருந்த வனவாசம் சென்ற கடவுள் பெயரை கொண்ட ஆணையாளரு, நிர்வாக சீர்திருத்தத்தினால, நிர்வாகத்தை 2 கோடி லாபத்துல கொண்டு வந்து நிறுத்தினாராம். சமீபத்துல அவரு பதவி உயர்வு பெற்று வேற ஏரியாவுக்கு போயிட்டாரு. அவருக்கு பதிலாக இந்த நகர் ஆட்சிக்கு ஆறு அணி நகர் ஆட்சியை சேர்ந்த முருகக்கடவுள் பெயரை கொண்டவரு கூடுதல் பொறுப்பேற்றாரு.பொறுப்பேற்ற ஓரிரு வாரத்திலேயே ஆணையாளர் மற்றும் நகர் ஆட்சியோட மற்ற துறை அதிகாரிகளோட கைகோர்த்து, நகர் ஆட்சியோட பொறுப்பு அதிகாரி பொறுப்பில்லாம கஜானாவை காலியாக்கிட்டாங்க. இதனால் நகர் ஆட்சி நிர்வாகம் அதல பாதாளத்துக்கு சென்றதோட இல்லாம, நகர் ஆட்சி பணியாளருங்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாம போய்விட்டதாம். இந்த மாசமும் சம்பளம் கிடைக்குமா தெரியலையேன்னு விழி பிதுங்கி நிக்கிறாங்களாம்… இதனால செலவாளியான அந்த அதிகாரி மீது ஊழியர்கள் கடும் கோபத்துல இருக்கிறாங்களாம்…’’ என்று சொன்னார் விக்கியானந்தா.

The post மாஜி அமைச்சர் ‘பெல்’லின் கட்சி பதவி பறிபோவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : minister ,Bell ,Yananda ,
× RELATED திருவெறும்பூர் அருகே வீட்டில் அழுகிய...